பதிவு செய்த நாள்
05
ஆக
2023
08:08
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலின் ஏழு நிலை ராஜகோபுரம் விமானத்திற்கு பாலாலயம் நடைபெற்றது.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான சிவாலயமாகவும், மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றிலும் முதன்மையானதாகவும் விளங்கும் அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23ம் தேதி கோவிலில் உள்ள பரிவார சன்னதி விமானங்களுக்கு, கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்று,பாலாலயம் செய்யப்பட்டது. அதன் பிறகு ஏழு நிலை ராஜகோபுரம் விமானத்திற்கு,மராமத்து செய்து வண்ணம் தீட்டும் பணிகளுக்காக பாலாலயம் செய்ய திருப்பணிக்குழு சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதில், நேற்று காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னியா லக்கன வேளையில் விக்னேஸ்வரர் பூஜை, புண்யாஹ வாசனம், வாஸ்து சாந்தி, பஞ்சகவ்யம், கலாகர்சனம், மூல மந்திர ஹோமம் ஆகியவை நடைபெற்று, ஏழு நிலை ராஜகோபுர விமானங்களுக்கு பாலாலயம் செய்யப்பட்டது.
இத்திருப்பணியில், ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கான மராமத்து மற்றும் வண்ணம் தீட்டும் பணிகளுக்கான பாலாலய உபயதாரர் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் குடும்பத்தினர், அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுச்சாமி, ரவி பிரகாஷ்,செயல் அலுவலர் பெரிய மருது பாண்டியன், திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள்,பெங்களூரு வேத ஆகம சமஸ்கிருத மஹா பாடசாலை தலைவர் ஸ்ரீ ஸ்ரீ குருக்கள் சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்கள் உள்ளிட்டோர் சிறப்பு பூஜைகள் மற்றும் ஹோமங்களில் கலந்து கொண்டனர். கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் குறித்து அறங்காவலர் குழு தலைவர் சக்திவேலிடம் கேட்டபோது, கோவில் கும்பாபிஷேகத்தை மிக விரைவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான திருப்பணிகள் தொடர்ந்து வேகமாக நடைபெறுகிறது. ஒரு சில உபயதாரர்கள் இன்னும் வரவேண்டிய சூழ்நிலையில், மூலவர் சன்னதி, கருணாம்பிகை அம்மன் சன்னதி, காலபைரவர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி ஆகியவை மிக விரைவில் பாலாலயம் செய்யப்படும். பக்தர்களின் வழிபாட்டிற்காக இந்த சன்னதிகள் கடைசியாக பாலாலயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பாபிஷேக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.