பதிவு செய்த நாள்
09
ஆக
2023
10:08
துடியலூர்: துடியலூர் அருகே உள்ள உருமாண்டாம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உற்சவ சிலை பிரதிஷ்டை திருவிழா நடந்தது.
துடியலூர் அருகே உருமாண்டம் பாளையத்தில் நூறு ஆண்டுகள் பழமையான பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஐம்பொன்னால் செய்யப்பட்ட பண்ணாரி மாரியம்மன் உற்சவ விக்ரக சிலை, மூலஸ்தானத்தில் வைத்து பூஜை செய்து, கெட்டிமேளத்துடன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அம்மன் விக்ரகம் கண் திறக்கும் நிகழ்ச்சி, அம்மன் கண்ணாடியில் பார்க்கும் நிகழ்ச்சியில் நடந்தது. அம்மனுக்கு பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து நடந்த அபிஷேக பூஜைகளில் பஞ்சாமிர்தம், நெய், தேன், பால், தயிர், திருமஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர் என பூஜைகள் நடந்தன.
சத்தியமங்கலம் பண்ணாரி கோவில், வனபத்ரகாளியம்மன் கோவில், காரமடை ரங்கநாதர் கோவில், பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில், மருதமலை முருகன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வெள்ளக் கிணறு பெரியநாயகி அம்மன் கோவில், முத்தூர் செல்வகுமார் கோவில், காசி, ராமேஸ்வரம் கோயில்கள், பொன்னர் சங்கர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை கொண்டு கோவில் வளாகத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நிகழ்ச்சியில், உருமாண்டாம்பாளையம், வெள்ளகிணறு, சுப்பிரமணியம் பாளையம், வி.சி.எஸ்., நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகள் தேவேந்திரன் தலைமையில் செய்யப்பட்டிருந்தன.