பதிவு செய்த நாள்
09
ஆக
2023
11:08
சென்னை: வடபழநி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை, வடபழநி முருகன் கோவில், பழநிக்கு நிகராக போற்றப்படுகிறது. இக்கோவில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகி விட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும், பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள். இதில் முக்கிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது வடபழநி முருகன் கோவில். ஆடி கிருத்திகையில் ஒவ்வொரு ஆண்டும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். அலகுகுத்தியும், காவடி எடுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நீ்ண்ட வரிசையில் காத்திருந்து கந்தனை வழிபட்டு செல்கின்றனர். வடபழநி கோவில் வீதி எங்கும் பக்தர்களின் அரோகரா கோஷம் வின்னை முட்ட ஒலிக்கிறது.
சிறப்பு ஏற்பாடு; பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, காவல் துறை கண்காணிப்பு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேர்த்திக்கடனாக அலகுகுத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கான ‘கார் பார்க்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.