பதிவு செய்த நாள்
09
ஆக
2023
12:08
ஆடிக் கிருத்திகை விழா, முருகன் கோவில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அலகு குத்தி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், விடியற்காலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடந்தன. மூலவருக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டு, லட்சார்ச்சனை, இரவு திருவீதியுலா ஆகியனவும் நடத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிரமமின்றி, வழிபட வசதியாக, கட்டண தரிசனத்திற்கும், சாதாரண தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் பக்தர் குழுவினர் சார்பில் அன்னதானம், நீர் மோர் தானம் ஆகியவை வழங்கப்பட்டன.
வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து, பள்ளி அறை திறக்கப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் வடபழனி முருகன் கோவிலுக்கு வர துவங்கி, நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். பெண் பக்தர்கள் பலர் அகல் விளக்கு ஏற்றி, பால் குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடனைச் செலுத்தினர். அதேபோல, சென்னை, கந்தக்கோட்டம், பெசன்ட் நகர் அறுபடை வீடு, திருப்போரூர், குமரக்கோட்டம், குன்றத்துார், சிறுவாபுரி, வல்லக்கோட்டை, மயிலம் மற்றும் அறுபடை வீடு தலங்களிலும் மற்ற முருகன் கோவில்களிலும் ஆடி கிருத்திகை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பிற்கு அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
குன்றத்துாரில் கொண்டாட்டம்: திருக்கோவில்கள் சூழ்ந்த நகரம் என்று கூறப்படும், குன்றத்துாரில் மலையின் மேற்பகுதியில் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் அடிவாரத்தில் 16 கால் மண்டபமும், மலைக்கு செல்வதற்காக 84 படிக்கட்டுகளும் உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னர் காலத்தில், இக்கோவில் நிறுவப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆடி கிருத்திகையை முன்னிட்டு, இக்கோவிலில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் திறக்கப்பட்டு சிறப்பு மகா அபிஷேகம் நடந்தது. அதைத்தொடர்ந்து, தங்க கவசம், புஷ்ப அலங்காரம், மோட்ச தீபாராதனை வழிபாடு, பொது தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
கோவை சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், ஆடிக்கிருத்திகையை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருகப்பெருமானுக்கு உகந்த விசேஷமான நாட்களில் ஆடிக்கிருத்திகையும் ஒன்று. இந்நாளையொட்டி, காந்திபார்க் சுக்கிரவார்பேட்டையிலுள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அதிகாலை சுவாமிக்கு, சகல திரவிய அபிஷே கம் நடந்தது.மலர் மாலைகள், அணிகலன்கள் வஜ்ரவேல், தங்கக்கிரீடம் ஆகியவை அணிவிக்கப்பட்டு சுவாமி ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார்.முன்னதாக, கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம் நடந்தது. திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி, சுவாமி தரிசனம் செய்தனர்.ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவில் வளாகத்திலுள்ள, ஆறுமுக சுப்ரமணிய சுவாமி சன்னதியில் முருகப்பெருமான், சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காந்திபார்க் பொன்னையராஜபுரத்திலுள்ள பாலமுருகன், சாய்பாபா காலனியிலுள்ள முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.