பதிவு செய்த நாள்
09
ஆக
2023
12:08
தஞ்சாவூர்,தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலை, சுவாமி நாதசுவாமி முருகன் கோவில், அறுபடை வீடுகளில் 4ம் படை வீடாகும். தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் குரு உபதேச தலம் என்ற சிறப்பும் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி இன்று (09ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின், முருகனுக்கு மஞ்சள், பால், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்று, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மாலை 7 மணிக்கு நேத்திர புஷ்கரணி குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.