பதிவு செய்த நாள்
08
செப்
2023
10:09
லக்னோ; சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களின் உணர்வுகளை புண்படுத்த, தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உரிமை இல்லை. உலகின் பழமையான மதங்களில் ஒன்றான ஹிந்து மதம் குறித்து அவதுாறான கருத்து தெரிவித்ததற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என, உத்தர பிரதேசத்தின் பல்வேறு முஸ்லிம் பிரிவுகளின் மத குருமார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, சனாதன தர்மம் குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்து நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, வட மாநிலங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யின் ராம்பூர் போலீஸ் ஸ்டேஷனில், உதயநிதி மீது இரண்டு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், உ.பி.,யைச் சேர்ந்த ஷியா சன்னி உலேமா முன்னணியின் பொது செயலரும், மூத்த ஷியா மதகுருவுமான மவுலானா ஹபீப் ஹைதர், அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் மவுலானா அமைப்பின் தலைவருமான ஷாபுதீன் ரிஸ்வி மற்றும் சன்னி பிரிவின் மதகுரு அபு ஸபார் நோமானி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உலகின் மிகப் பழமையான மதங்களில் ஒன்றான ஹிந்து மதம் குறித்து தரக்குறைவான கருத்தை தெரிவித்த அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும். மக்களின் உணர்வுகளை புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக, இண்டியா கூட்டணியினர் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். உதயநிதியின் இந்த பேச்சு மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிறது. மக்களை ஒன்றுபடுத்தத் தான் மதங்கள் இருக்கின்றனவே தவிர ஜாதி அடிப்படையில் அவர்களை பிரிப்பதற்கு அல்ல. பொறுப்புள்ள பதவியில் இருப்பவர் நாட்டின் சட்டம் - ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.