வாசுதேவநல்லூர் அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2012 10:10
சிவகிரி: வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை மணல் குவாரியில் மணல் அள்ளும்போது முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூர் அருகே திருமலாபுரத்திற்கு பாத்தியப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குலசேகரபேரிகுளம் தரணி சர்க்கரை ஆலைக்கு மேற்கே உள்ளது. இக்குளத்தில் கடந்த 30ம் தேதி முதல் பொதுப்பணித் துறையினரால் மணல் குவாரி அமைக்கப்பட்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குலசேகரபேரி குளத்தின் வடபகுதியில் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் மணல் அள்ளும்போது இரண்டு இடங்களில் முதுமக்கள் தாழி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து இப்பகுதியில் புதையல்கள் மற்றும் பண்டைய கால நினைவு சின்னங்கள் இருக்கக்கூடும் என்று திருமலாபுரம் வி.ஏ.ஓ. சேகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சிவகிரி தாசில்தார் கஸ்தூரி, வாசுதேவநல்லூர் ஆர்.ஐ. கனகராஜ், இன்ஸ்பெக்டர் சண்முகவேல், திருமலாபுரம் வி.ஏ.ஓ. சேகர் விரைந்து சென்று முதுமக்கள் தாழியை பார்வையிட்டனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் அந்த தாழியை எடுத்து திறந்து பார்த்தனர். அந்த இரண்டு தாழிகளில் ஒன்றில் ஒரு கிராம் எடை கொண்ட தங்கத்தினால் ஆன இரண்டு தோடுகள், 4 வளையங்கள், வெள்ளியிலான ஒரு தோடு, மக்கிப்போன ஒரு எலும்பு துண்டு, பளபளப்பான 100க்கும் மேற்பட்ட பவளப் பாசிகள் இருந்தன. இரண்டாவது முதுமக்கள் தாழியில் ஒரு மண் பானை இருந்தது. அதில் புதையல் இருக்கலாம் என்று நினைத்து அதிகாரிகள் வந்து திறந்து பார்த்தனர். அதில் மக்கிப்போன எலும்புகள் மட்டுமே இருந்தது. முதுமக்கள் தாழியில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிவகிரி தாலுகா அலுவலகம் சார்பில் வாசுதேவநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லை தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.