பதிவு செய்த நாள்
14
செப்
2023
10:09
சென்னை: சனாதன தர்மமும், ஹிந்து மதமும் ஒன்றே என்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள, பிளஸ் 2 பாடப் புத்தகம் கூறுகிறது என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: அமைச்சர்கள் உதயநிதியும், சேகர்பாபுவும், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியதற்கு, அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். பின், ஹிந்து மதமும், சனாதன தர்மமும் வேறு என்று கூறினர். சனாதன தர்மமும், ஹிந்து மதமும் ஒன்றே என்று, தமிழக அரசு வெளியிட்டுள்ள, பிளஸ் 2 பாடப் புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே நித்திய தர்மம் என்றும் குறிப்பிடுகிறது. சேகர்பாபு, உதயநிதி அறிவு பெற, பிளஸ் 2 வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அண்ணாமலையின் மற்றொரு அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்... உங்களின் பதிலுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம். பி.ஜி.ஆர்., எனர்ஜி ஊழல், ஊட்டச்சத்து பெட்டகம் ஊழல், டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் ஊழல், சென்னை மெட்ரோ ரயில் ஊழல், இ.டி.எல்., இன்ப்ரா திட்ட ஊழல், போக்குவரத்து ஊழல், நோபல் ஸ்டீல் ஊழல், மருத்துவ சேவை கழகத்தில் ஊழல், அறநிலைய துறையில் ஊழல் என நிறைய நடந்துள்ளன. உங்கள் அமைச்சரவையில் உள்ள, 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இலாகா இல்லாத அமைச்சர் ஒருவர், வேலை வாங்கி தருவதாக பணம் வசூலித்த மோசடியில், சிறையில் இருக்கிறார். உங்கள் மகன் மற்றும் கட்சிக்காரர்களால், திட்டமிட்டு நடத்தப்படும், ஹிந்து தர்மத்தின் மீதான தாக்குதல், மேற்கூறிய ஊழல்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. உங்கள் கையில் உள்ள ஒரு காகிதத்தை நம்பியும், சி.ஏ.ஜி., அறிக்கையை தவறாக மேற்கோள் காட்டியும், உங்களை நீங்களே தர்மசங்கடத்திற்கு ஆளாக்கிக் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.