பதிவு செய்த நாள்
28
செப்
2023
11:09
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 மற்றும் 24 க்கு இடையில் பிராண பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வில் பங்கேற்பார் என்று கூறப்பட்டுள்ளது.
அயோத்தியின் மூன்றடுக்கு ராமர் கோவிலின் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கோவிலின் முதல் தளத்தில் மும்முரமாக வேலை நடைபெற்று வருகிறது. அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் முடிவடையும் என்றும், ஜனவரி 22, 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெறும் என்றும் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 மற்றும் 24 க்கு இடையில் பிராண பிரதிஷ்டை தொடர்பான நிகழ்வில் பங்கேற்பார் என்றும், சரியான தேதியை பிரதமர் அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் மிஸ்ரா கூறினார்.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு இந்து மதத்தின் அனைத்து சமூக குருமார்களையும் அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. சர்வதேச நாடுகளின் மத குருமார்களையும் அழைக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது. என்றார்.