பதிவு செய்த நாள்
05
அக்
2023
05:10
வடவள்ளி: மருதமலை அடிவாரத்தில் இருந்து, சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில், இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல இன்று முதல் தடை அமலுக்கு வந்தது.
முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக, லிப்ட் அமைக்கும் பணி, மலைப்பாதையில் சாலை புனரமைக்கும் பணி, யாசாலை மண்டபம் கட்டும் பணி, தேர் வலம் வரும் பாதையில், கருங்கல் தளம் அமைக்கும் பணி, மலைமேல் உள்ள பார்க்கிங் பகுதியில், புதிய கழிப்பிட கட்டடம் கட்டும் பணி என, 40 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மலைமேல் உள்ள பார்க்கிங் பகுதியில், இடப்பற்றாக்குறை உள்ளதாலும், சாலை பணி மேற்கொள்வதாலும், மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் பல சிக்கல்கள் ஏற்பட்டது. இதனையடுத்து, அக்டோபர் 5ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு, அடிவாரத்தில் இருந்து மலைப்பாதையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல, கோவில் நிர்வாகத்தினர் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், இந்த தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. இதனையடுத்து, நேற்று காலை முதல் மலைப்பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து குறித்த அறிவிப்பு பலகையும் அடிவாரத்தில் கோவில் நிர்வாகத்தினர் வைத்துள்ளனர். இன்று கோவிலுக்கு, தங்களின் வாகனத்தில் வந்த பக்தர்களை, அடிவாரத்திலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, படிக்கட்டுப்பாதை மற்றும் திருக்கோவில் பஸ்கள் மூலம் மலைமேல் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.