கமுதி ஆண்கள் மட்டும் வழிபடும் பெண் தெய்வம்; ஆடுகள் பலியிட்டு வினோத வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2023 10:10
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள எல்லைபிடாரி அம்மன் பீடத்திற்கு ஆடுகள் பலியிட்டு ஆண்கள் மட்டும் வினோத வழிபாடு செய்தனர்.
கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் உள்ள கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் பீடம் உள்ளது. இங்கு புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம்.இங்கு பலஆண்டுகளுக்கு முன்பு 5 ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர் தனது அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வந்தவர் மாயமானார்.பின்னர் முதல்நாடு கிராமமக்களின் கனவில் வந்து தங்கள் ஊர் எல்லையில் இருந்து தெய்வமாக காப்பாற்றுவேன் எனவும் என்னை ஆண்கள் மட்டும் வருடம் ஒரு நாள் ஆடுகள் பலியிட்டு வழிபாடு செய்ய வேண்டும், அப்பகுதிக்கு பெண்கள் வரக்கூடாது என்றும் கூறப்படுகிறது. இதனைஅடுத்து இந்தாண்டு புரட்டாசி மாதம் மூன்றாம் வாரத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத வழிபாடு தேதி அறிவித்ததில் இருந்து பீடம் அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. திருவிழாக்காக முதல்நாடு கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் அரிசி,பணம் வசூல் செய்து பூஜை நடத்தப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு கைகுத்தல் பச்சரிசி சாதம் உருண்டை செய்து 51 ஆடுகள் பலியிட்டு படையல் இடப்பட்டது.பின்பு அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது. படையல் இடப்பட்ட உணவுகளை அனைவருக்கும் பரிமாறப்பட்டது.இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜைபொருட்கள் அனைத்தும் குழித்தோண்டி புதைக்கப்பட்டது.ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் திருவிழாவிற்கு கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு எல்லை பிடாரி அம்மனை வழிபட்டனர்.