பழநி: பழநி கோயிலில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டது. பழநி கோயிலுக்கு பக்தர்கள் ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் சென்று வரலாம். ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணிகள் கடந்த ஆக.18,ல் துவங்கியது. அன்று முதல் ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்தன. இதில் பழுதடைந்த பாகங்கள், தேய்மானமான பொருட்கள், சாப்ட்கள் ஆகியவை புதிதாக மாற்றப்பட்டது. அனைத்து பாகங்களும் சோதித்துப் பார்க்கப்பட்டு பொருத்தப்பட்டது. அதன்பின் எடைகள் வைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்தது. ரோப் கார் சேவையின் பாதுகாப்பு குறித்த வல்லுநர்கள் ஆய்வு செய்தனர். நேற்று (அக்.8) காலையில் ரோப் கார் சேவை பக்தர்களின் பயன்பாட்டிற்கு இணை கமிஷனர் மாரிமுத்து தலைமையில் துவங்கி வைக்கப்பட்டது.