கோட்டை மாரியம்மன் பொங்கல் விழா
பதிவு செய்த நாள்
26
பிப் 2026 02:02
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் பொங்கல் விழா, நேற்று கோலாகலமாக நடந்தது; பக்தர்கள், மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பொங்கல் விழா நடக்கிறது. கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. கடந்த 23ம் தேதி, கம்பம் நடப்பட்டது. தினமும், பக்தர்கள் கம்பத்துக்கு தண்ணீர் ஊற்றியும், மஞ்சள், குங்குமம் வைத்தும், மாலை அணிவித்தும் வழிபட்டனர். நேற்று முன்தினம், படைக்கலம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மை அழைப்பு நடந்தது. நேற்று, அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாரியம்மன், தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், மாவிளக்கு எடுத்து வந்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். பக்தர்கள், சேவல் மற்றும் கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்; தவழும் குழந்தை, புதுமண தம்பதியர், சிறுவர், சிறுமியர், ஆடு, மாடு, நாய், கால்கள் போன்ற உருவ பொம்மைகளை சமர்ப்பித்தும் வழிபட்டனர். நகரின் முக்கிய வீதிகளில் இருந்து, பக்தர்கள் பூவோடு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இன்று, மஞ்சள் நீர் உற்சவமும், 27ம் தேதி அன்னதான நிகழ்ச்சியும் நடக்கிறது.
|