பதிவு செய்த நாள்
16
அக்
2023
10:10
நரிக்குடி: ஆயிரம் ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற நரிக்குடி எஸ். கல்விமடை சிவாலயத்தில் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.
நரிக்குடி எஸ். கல்விமடையில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த, மிகப் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற திருநாகேஸ்வரமுடையார், சமேத திருநாகேஸ்வரி தாயார் கோயில் உள்ளது. மகாளய அமாவசையில் திருவிழா நடந்து வருகிறது. மூலவர், உற்சவ மூர்த்திகளான சிவப்பெருமான், அம்பாளுக்கு மஞ்சள், திருமஞ்சணம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம், உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வில்வம், ரோஜா, செவ்வந்தி, சாமந்தி, தாமரை, மரிக்கொழுந்து, முல்லை, மல்லிகை உள்ளிட்ட 2 டன் எடையுள்ள 11 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனை நடந்தது. மேளதாளங்கள், வான வேடிக்கை முழங்க உற்சவர் பூ பல்லாக்கில், முளைப்பாரியுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். வீடுதோறும் பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமியை வரவேற்றனர். மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருப்பணிக்குழு தலைவர் பாவா மோகன, துணைத் தலைவர் முத்தையா, செயலாளர் தங்கச்சாமி, பொருளாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.