பதிவு செய்த நாள்
15
அக்
2023
11:10
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான கிழக்கு ரத வீதியில் உள்ள பெரிய நாயகி அம்மன் கோவிலில் நேற்று (அக்., 15ல்) காலை நவராத்திரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. மலைக்கோயிலில் உச்சிகால பூஜையில் விநாயகர், மூலவர், துவாரபாலகர்கள், மயில் வாகனம், நவவீரர்கள் உட்பட பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது. இதில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புவனேஸ்வரி அம்மன், மலைக்கோயில் போகர் சன்னதியில் இருந்து அடிவாரம், கிரிவீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு பல்லக்கு மூலம் கொண்டு வரப்பட்டது. நவராத்திரி விழா அக்., 23 வரை விழா நடை பெற உள்ளது. விழாநாட்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். நவராத்திரி விழா நாட்களில் பக்தி இசை, சொற்பொழிவு, நாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பெரிய நாயகி அம்மன் கோவிலில் நடைபெறும்.
விழாவில் ஒன்பதாம் நாளான அக்., 23ல் மலைக்கோயிலில் மதியம் 1:30 மணிக்கு . சாயரட்சை பூஜை நடைபெறும்.அதன்பின் பராசத்தி வேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்கு வந்தடையும். தங்கக் குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதை மங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்வு நடைபெறும். அதன் பின் சுவாமி பெரியநாயகியம்மன் கோயிலை வந்தடைந்து, வேல் மலைக்கோயில் அடைந்ததும், அர்த்த சாம பூஜை நடைபெறும்.