பதிவு செய்த நாள்
20
அக்
2023
01:10
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில் நடக்கும், நவராத்திரி கொலு விழாவை, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், கடந்த, 15ம் தேதி முதல் நவராத்திரி கொலு விழா தொடங்கியது. இது வரும், 23ம் தேதி வரை நடக்கிறது. கொலுவில், விநாயகர், சிவன், சக்தியின் வடிவங்கள், கிருஷ்ணன் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கடவுள்களின் பொம்மைகள், யோகிராம், சாய்பாபா, சங்கராச்சாரியார், ராமானுஜர், குருநானக் உள்ளிட்ட ஏராளமான ஞானிகளின் உருவ பொம்மைகள், மஹாபாரதம் மற்றும் ராமாயணம் கதாபாத்திரங்களை விளக்கும் பொம்மைகள், 20க்கும் மேற்பட்ட இசை கருவிகளின் பொம்மைகள், கிருஷ்ண அவதாரம் மற்றும் கிருஷ்ண லீலா பொம்மைகள், பகவத் கீதை விஸ்வரூப தரிசன பொம்மைகள் என, 500க்கும் மேற்பட்ட பொம்மைகள் கொலுவில் இடம் பெற்றிருந்தன. தினமும் பகவான் யோகிராம் சுரத்குமாரின் உருவச்சிலைக்கு சிறப்பு பூஜை, மஹா லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நவராத்திரி விழாவை கண்டு வழிபட்டு வருகின்றனர்.