பதிவு செய்த நாள்
26
அக்
2023
01:10
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரியகோவில் உள்ளே வந்தால் பதவி போயிவிடும் என்ற அச்சத்தில், அரசு விழாவையே புறக்கணித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,கள், மேயர் ஆகியோரால் சர்ச்சை எழுந்துள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டி எழுப்பிய, மாமன்னன் ராஜராஜ சோழனின், 1,038வது விழா இரண்டு நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சதய விழாவை அரசு விழாவாக அறிவித்த நிலையில், எந்த ஆண்டும் இல்லாததை விட இந்தாண்டு விழா ஏற்பாடுகள் கூடுதலாக செய்யப்பட்டிருந்தது. சதய விழாவில், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பங்கேற்பதாக, விழா குழு சார்பில் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆனால் யாரும் வரவில்லை. அமைச்சர்கள் இருவரும் வேறு மாவட்டங்களில் ஆய்வுகளுக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இதையும் தாண்டி தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், கோவில் வெளியே பரபரப்பாக சுற்றி திரிந்தார். கோவில் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிலைக்கு மாலை அணிவித்தார். ஆனால் விழா நடந்த இரண்டு நாட்களும் மாநகராட்சி சார்பில் கோவில் உள்ளே மாநகராட்சி பணியாளர்கள் விழாவை கவணித்தனர். அப்படியாக நடக்கும் பணிகளை கூட எட்டிபார்க்க மேயர் ராமநாதன் கோவில் நுழைவு வாயிலை கூட நெருங்கவில்லை. இதை போல, லோக்கல் எம்.எல்.ஏ., நீலமேகம், திருவையாறு எம்.எல்.ஏ.,வும், மாவட்ட செயலாளருமான சந்திரசேகரன் இருவரும் எங்கே போனார்கள் என கூட தெரியவில்லை. லட்சக்கணக்ககில் செலவு செய்து, விழா அழைப்பிதழ், அனைத்து தொகுதி எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் பெயர்கள் அச்சடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் கூட வரவில்லை. இப்படியாக முதல்வர் ஸ்டாலின் பகுத்தறிவு பேசும் நிலையில், ஆளும்கட்சியே அரசு விழாவை புறக்கணித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழா துவக்கத்தில் இருந்து முடியும் வரை, திமுகவை சேர்ந்தவர் என்பதால், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் கலந்துக்கொண்டார்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது; சதய விழா தஞ்சாவூர் மக்களுக்கான விழா. காலம் காலமாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சதய விழாக்குழு, மாவட்ட நிர்வாகம் நடத்தும். இந்தாண்டு அரசு விழாவாக அறிவித்த நிலையில், சில துறைகள் விழாவில் இணைந்து நடத்தியது. இருப்பினும் அரசு விழா என்பதால், அரசு தரப்பிலும், ஆளும்கட்சியினர் நிகழ்ச்சிகள் கலந்துக்கொண்டு நடத்த வேண்டும். ஆனால், சென்டிமென்ட் அச்சத்தை காரணம் காட்டி, பொறுப்பு அமைச்சரான மகேஷ், எம்.எல்.ஏ., மேயர் உள்ளிட்டோர் ஓதுங்கி கொண்டு நிலையில், அழைப்பிதழில் அவர்கள் பெயர் எதற்கு அச்சடிக்கப்பட்டது. பகுத்தறிவு பேசும் தி.மு.க.,வினர், சோழன் விழாவை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் போது, கோவிலில் வர தயக்கம் காட்டுவது புரியவில்லை. வருங்காலத்தில் அழைப்பிதழில் அமைச்சர்கள், கட்சியினர் பெயரை சேர்க்காமல் தவிர்க்க வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.