வேடசந்தூர்: வேடசந்தூர் அய்யனார் கோயிலில், ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அங்குள்ள சிவபெருமானுக்கு, அன்னாபிஷேகம் நடந்தது. பொதுவாக, இறைவனின் சிலைக்கு பால், தயிர், தேன், இளநீர், புனித நீர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால், அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த வகையில் அன்னாபிஷேகம் என்பது சமைக்கப்பட்ட அரிசியால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வதாகும். அன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. வேடசந்தூர் அய்யனார் கோயிலில் சிவனுக்கு நடந்த அன்ன அபிஷேகத்தை தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் பூசாரி சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.