உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோயில், சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நேற்று காலை அன்னாபிஷேகம் நடைபெற்றது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். நேற்று காலை உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் லிங்கம் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து அன்னாபிஷேகம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான கிலோ அரிசியில் சாதம் தயார் செய்து சிவலிங்கத்திற்கு சாத்தப்பட்டது. அதேபோல சுருளி அருவியில் ஆதி அண்ணாமலையார் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பல ஜென்ம பாவங்களை போக்க கோடி லிங்க தரிசனம் செய்ய வேண்டும். ஆனால் ஒருவரது வாழ்நாளில் அது சாத்தியமில்லை என்பதால், சிவபெருமான் அருளியது தான் அன்னாபிஷேகம். இந்த நாளில் சிவனுக்கு சார்ந்த படும் ஒவ்வொரு பருக்கையிலும் ஒரு சிவத்தை பார்க்கலாம். எனவே இந்நாளில் பக்தர்கள் சிவலிங்கத்தை தரிசித்தால் கோடி லிங்கத்தை தரிசித்ததற்கு சமம் என்று சிவாச்சாரியார்கள் கூறினார்கள். அன்னாபிஷேகத்தை தொடர்ந்து முல்லைப்பெரியாறு , சுருளியாற்றில் அன்னம் கரைக்கப்பட்டது. அதிகாலை முதல் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சுருளி அருவி ஆதி அண்ணாமலையார் கோயிலில் சிவனடியார் முருகன் சுவாமிகள் சுருளியாற்றில் அன்னத்தை கரைத்தார்.