மயிலாடுதுறையில் விஸ்வ இந்து பரிஷத் மாநில துணைத்தலைவர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காசிமடம் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த பிரசித்திபெற்ற இந்த மடத்தை சில சமூக விரோத சக்திகள் மிரட்டுவதும், தேவையில்லாத சச்சரவுகளை உருவாக்குவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 29ம் தேதி இரவு 1 மணியளவில் மடத்தின் உள்ளே உள்ள பொய்கை குளத்தின் சுற்றுச்சுவரை இடித்து மடத்திற்கு எதிரான தீய சக்திகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து மடத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் சமூக விரோத சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்றத்தில் இருந்து இந்து கோவில்கள் தாக்கப்படுவதும், திருமடங்கள் இழிவுப்படுத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. அரசு உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.