கோவில்பாளையம்; கோவில்பாளையம், வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. கோவில்பாளையத்தில் பழமையான வன்னிய பெருமாள் கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா முளைப்பாலிகை ஊர்வலத்துடன் துவங்கியது. மாலையில் திருவிளக்கு வழிபாடு, எண் திசை காவலர் வழிபாடு, வேள்வி பூஜை நடந்தது. விமான கலசங்கள் நிறுவப்பட்டன. எண் வகை மருந்து சாற்றப்பட்டது. நேற்று முன்தினம் அதிகாலையில் இரண்டாம் கால வேள்வி பூஜை நடந்தது. திருக்குடங்கள் கோவிலை வலம் வந்து கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. விமான கலசத்திற்கும் மூல மூர்த்தி களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் ஆசியுரை வழங்கினார். சாய்பாபா காலனி நாம பஜன் மண்டலியின் பக்தி பஜனை நடந்தது. மதியம் அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சிரவை ஆதீன அருட்பணி மன்றத்தினர் வேள்வி வழிபாட்டினை நடத்தினர்.