பதிவு செய்த நாள்
07
நவ
2023
11:11
திருச்செந்தூர், திருச்செந்தூர் கோவிலில் கந்த சஷ்டி விழாவின் போது, கோவில் உட்பிரகாரத்தில் விரதமிருக்க அனுமதி கிடையாது என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று காலை வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் யானை நினைவு மண்டபம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர் பாபு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து கோவிலின் உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவில் வளாகத்தில் பசு மடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருத்தணி, திருவேற்காடு, திருச்செந்துார் உள்ளிட்ட 4 இடங்களில் பசு மடமும், 11 இடங்களில் யானை நினைவு மண்டபமும் கட்டப்பட உள்ளது. திருச்செந்துாரில் ரூ.49.50 லட்சம் மதிப்பில் யானை நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. எச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பில் 20 பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது 35 சதவீத பணிகள் நடந்துள்ளது. கந்த சஷ்டி திருவிழா வில் 20 லட்சம் மக்கள் கூடுவார்கள் அதற்காக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கந்தசஷ்டியில் விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோவில் வளாகத்தில் 21 இடத்தில் கழிப்பறை, குடிநீர் வசதியுடன் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் தங்கி விரதம் இருக்கலாம். வளாகபணி பெருந்திட்ட 2025ம் ஆண்டுக்குள் நிறைவடையும்.
யாத்திரிகர் நிவாஸ்; மேலும், அரசின் சார்பில் ரூ.100 கோடியில் செய்யப்பட உள்ள 18 திட்ட பணிகள் கார்த்திகை மாதத்தில் தொடங்க உள்ளது. யாத்திரிகர் நிவாஸ் 45 நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரும். கந்த சஷ்டி திருவிழாவின் போது நீதிமன்ற உத்தரவுபடி உட்பிரகாரத்தில் பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறங் காவலர் குழுத் தலைவர் அருள்முருகன், கலெக்டர் லட்சுமிபதி, இந்து சமய அறநிலையதுறை ஆணையர் முரளிதரன், கோவில் இணை ஆணையர் உடனிருந்தனர்.