பதிவு செய்த நாள்
07
நவ
2023
05:11
சூலூர்: செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில், வரும், 14 ம்தேதி கந்த சஷ்டி விழா துவங்குகிறது.
சூலூர் அடுத்த செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு கந்த சஷ்டி விழா பக்தி பரவசத்துடன் ஆண்டுதோறும் சிறப்பாக நடக்கும். இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் மற்றும் சூரசம்ஹார விழா வரும், 14 ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் காலை, 7:30 மணிக்கு யாக சாலை பூஜைகள் நடக்க உள்ளன. வரும் 18 ம்தேதி காலை விளாப்பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு சுவாமி வீர நடன காட்சியும், பெரிய நாயகி அம்மன் சன்னதியில் சூரசம்ஹாரத்துக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மலையை சுற்றி சூரனை சம்ஹாரம் செய்தலும், வெற்றி மாலை சூட்டலும் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு மலைக்கு எழுந்தருளும் சுவாமிக்கு, 108 லிட்டர் பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடக்கின்றன. தொடர்ந்து திருப்புகழ் இசை வழிபாடு, மகா தீபாராதனை நடக்கிறது. 19ம்தேதி மதியம், 12:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.