பதிவு செய்த நாள்
14
நவ
2023
10:11
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, துர்க்கையம்மன் உற்சவத்துடன் இன்று (14ம் தேதி) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் மற்றும் 9 கோபுரங்கள், 20 கி.மீ., துாரம் தெரியும் மின்விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டு பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா இன்று, 14ம் தேதி, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மனுக்கு உற்சவம் நடத்தப்பட்டு, விழா இனிதே நடக்க வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டு விழா தொடங்குகிறது. இதில் அம்மன், காமதேனு வாகனத்தில், இரவில் மாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, மறுநாள், 15ம் தேதி கோவிலில் உள்ள காவல் தெய்வமான பிடாரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, 16ம் தேதி, முழுமுதற் கடவுள் விநாயகருக்கு உற்சவம் நடத்தப்படுகிறது. வரும், 17ம் தேதி தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்க உள்ளது. விழாவில், தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் சுவாமியும், இரவில், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர், தினமும் தனித்தனியாக வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், வரும், 23ல் பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்க உள்ளது. 26ல், அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது. விழாவை காண பல்வேறு பகுதிகளிலிருந்து, 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகின்றன. விழாவில், கோவிலில் உள்ள, கிழக்கு ராஜகோபுரம், தெற்கு திருமஞ்சன கோபுரம், மேற்கு கோபுரம், வடக்கு அம்மனி அம்மன் கோபுரம் உள்ளிட்ட, 9 கோபுரங்கள் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டு இவை, 20 கி.மீ., துாரம் வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. மேலும், கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளன. தீப திருவிழாவால் திருவண்ணாமலை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.