பதிவு செய்த நாள்
14
நவ
2023
12:11
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி, திங்கள்கிழமை முதல் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி தொடங்கியது.
காளஹஸ்தி கோவிலுக்கு வெளியே பக்தர்கள் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி தீபங்களை ஏற்றி வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று அமாவாசை (திங்கள்கிழமை) மதியம் வரை நீடித்ததால் கார்த்திகை மாதம் துவங்கியதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதையொட்டி அதிகாலை முதலே தீபம் ஏற்றப்பட்டது.
ஆனால் காளஹஸ்தி சிவன் கோயிலில் நெய் விளக்குகள் விற்பனை சர்ச்சையாகியுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலை இல்லாதது, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு விதமாக விலைக் கூறி, பக்தர்களிடம் வாங்க வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் நடந்துள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு அறங்காவலர் குழு இதில் கவனம் செலுத்தியது. ஆனாலும், பிரச்னையை முழுமையாக தீர்க்க முடியவில்லை. கார்த்திகை மாதம் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் விளக்குகளை விற்பனை செய்ய வியாபாரிகளுக்கு அனுமதி மறுத்துள்ளது காவல்துறை. மேலும், வியாபாரிகள் பக்தர்களை அறங்காவலர் ஒருவர், அதிகாரப்பூர்வமற்ற முறையில் நெய் டப்பாக்களை விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உள்ளூர் எம்எல்ஏவிடம் வியாபாரிகள் புகார் அளித்தும், போலீசார் நெய் விளக்குகள் விற்பனைக்கு அனுமதி வழங்கவில்லை. மீண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியுள்ள நிலையில், நெய் விளக்குகள் குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது. இப்பிரச்னைக்கு அறங்காவலர் குழு மற்றும் கோவில் நிர்வாகத்தினர் தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை மாலை 6:30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவை மண்டபம் அருகில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சலி சீனிவாசலு மற்றும் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தலைமையில் ஆகாய தீபம் ஏற்றப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.