பதிவு செய்த நாள்
14
நவ
2023
01:11
துாத்துக்குடி: துாத்துக்குடி சிவன் கோயிலில், கந்தசஷ்டி திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. வரும் 18ம் தேதி சூரசம்ஹாரம், 19ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. துாத்துக்குடி, பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில், சுப்பிரமணியசுவாமி மகமை பரிபாலன சங்கம் சார்பில், ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. 129ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா காப்புகட்டுதல் நேற்று முன்தினம் நடந்தது. சிவன் கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமிக்கு காலையில் கும்பஜெபம், பல்வேறு வகையான அபிஷேகம், கும்பாபிஷேகம், யாகசாலை பூஜை. பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மூலம் நடந்தது. இரவு சுப்பரமணியசுவாமி ரதவீதி உலா வருதல் நடந்தது. விழாவை ஒட்டி, ஒவ்வொரு நாளும் இது போன்ற சிறப்பு பூஜைகள், ரதவீதி உலா வருதல் நடக்கிறது, விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் சூரசம்ஹார விழா வரும் 18ம் தேதி நடக்கிறது. 19ம் தேதி சுப்பிரமணியசுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. 22ம் தேதி கந்தசஷ்டி விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை சுப்பிரமணியசுவாமி பரிபாலன சங்கம், அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, அறங்காவலர்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம், சாந்தி, ஜெயலட்சுமி, நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.