பதிவு செய்த நாள்
18
நவ
2023
05:11
பழநி: பழநி, கந்தசஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பழநிகோயிலில் காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா நவ.13, துவங்கியது. கந்த சஷ்டி திருவிழாவில் இன்று (நவ.18) மலைக்கோயிலில் அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. மதியம் 1:30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. அதன்பின் மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நடைபெற்று, கோயில் நடை அடைக்கப்பட்டது. சஷ்டி விரதம் இருந்த முருக பக்தர்கள் வாழை தண்டு, பழங்கள், காய்கறிகள், கலந்த படையலை வைத்து கந்த சஷ்டி கவசம் பாடி முருகனை வழிபட்டனர். அதன் பின் ஆறு நாட்கள் உபவாசம் இருந்த பக்தர்கள் படைக்கப்பட்ட தண்டை உட்கொண்டனர். பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமார சுவாமி, மலைக்கோயில் இருந்து சின்னகுமாரசுவாமியும் அடிவாரத்தில் எழுந்தருளினர். பராசக்தி வேல் மலையிலிருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது. அதன்பின் வடக்கு கிரி வீதியில் தாரகாசுரன், கிழக்கு கிரிவிதியில் பானு கோபன், தெற்கு தெரு வீதியில் சிங்கமுகாசூரன், மேற்கு கிரிவீதியில் சூர பத்மன் என பக்தர்கள் படை சூழ அரோகரா கோஷத்துடன் சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாடள (நவ.19) காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேய்வானை உடன் சண்முகருக்கும் மாலை 6:30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி, தேய்வானை உடன் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறும்.