பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நாக பஞ்சமி விழாவையொட்டி பெருமாள் சேஷ வாகனத்தில் அருள்பாலித்தார்.
வழக்கமாக தீபாவளி நிறைவடைந்து ஐந்தாவது நாள் நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது. அன்று பெண்கள் நாகர் மேடு மற்றும் நாகம் குடி கொண்டுள்ள புற்றுகளில் பால் ஊற்றியும், மஞ்சள் நீரை தெளித்தும் அபிஷேகம் நடத்தி வழிபடுவர். தொடர்ந்து மஞ்சள் கயிறுகளை நாகர் சன்னதிகளில் சுற்றி பின்னர் கையில் கட்டி விரதம் இருப்பார். இதனை ஒட்டி பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து பாகவதர்களால் பஜனை பாடல்கள் பாடப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நிறைவடைந்து, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. எமனேஸ்வரம் சித்தி விநாயகர் கோயில் மற்றும் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ள நாகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பரமக்குடி காக்கா தோப்பு நாகர்மேடு சன்னதியில் பெண்கள் திரளாக வழிபாடு நடத்தினர்.