பதிவு செய்த நாள்
23
நவ
2023
08:11
சிருங்கேரி :ஸ்ரீ சாரதா பீடம் அமைந்துள்ள சிருங்கேரியில், இன்று முதல் தெப்போத்ஸவமும், துங்கா ஆரத்தியும் நடைபெற உள்ளன. ஆதிசங்கரர் நிறுவிய நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானதும், தென்திசைக்குமான ஸ்ரீ சாரதா பீடம், சிருங்கேரியில், துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது.
கடந்த, 2020ம் ஆண்டு துங்கா புஷ்கரம், மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தெப்போற்சவமும், துங்கா ஆரத்தியும், ஐந்து நாட்கள் நடைபெறுகின்றன. இன்று ஏகாதசி முதல், ஒவ்வொரு நாளும் முறையே, ஜனார்தன சுவாமி முதல் நாளும்; கணபதி, சுப்ரமண்யர், உமா மஹேஸ்வரர் இரண்டாம் நாளும்; ஆதிசங்கரர் மூன்றாம் நாளும்; ஸ்ரீ சாரதாம்பாள் நான்காம் நாளும்; கடைசி தினத்தன்று பவானி மலஹானிகரேஸ்வரர், வித்யாசங்கரர் ஆகிய மூர்த்திகள் தெப்பத்தில் எழுந்தருளுவர். தெப்போத்ஸவ முடிவின்போது துங்கா ஆரத்தியும் நடைபெறும். கடைசி தினமான 27ம் தேதி, லட்ச தீபோத்ஸவம் நடைபெறும். இதன் நேரலையை, சாரதா பீடம் யுடியூப் சேனலில் இரவு, 7:00 மணி முதல் காணலாம்.