அழகர்கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2023 10:11
அழகர்கோவில் : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ராஜகோபுர கும்பாபிஷேகம் இன்று (நவ.,23) கோலாகலமாக நடைபெற்றது.
கள்ளழகர் கோயிலில் கடந்த 2011ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலில் ரூ.2 கோடியில் ராஜகோபுரத் திருப்பணிகள் நடைபெற்று, நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று முன்தினம் கோயிலில் கும்பாபிஷேக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கின. காலையில் வாஸ்து சாந்தி பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. இதில் மூலவர் சன்னதியிலிருந்து பூஜை செய்யப்பட்ட நுாபுர கங்கை தீர்த்தக்குடங்கள் 160 கலசங்களை பட்டர்கள் யாகசாலைக்கு எடுத்து வந்தனர். சுந்தர நாராயண அம்பி பட்டர் தலைமையில் 40 பட்டர்கள், வேத விற்பன்னர்களுடன் யாகசாலை பூஜை மாலை 5:00 மணிக்கு துவங்கியது. தொடர்ந்து நேற்று 2வது நாள் யாகசாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை 9:15 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையிலான அறங்காவலர் குழுவினரும், துணைகமிஷனர் ராமசாமி தலைமையில் அலுவலர்களும் செய்திருந்தனர்.