பதிவு செய்த நாள்
23
நவ
2023
06:11
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவிலில் இரவு நடக்கும் அர்த்தஜாம பூஜையில் சண்டிகேஸ்வரரை வழிபட பக்தர்களை அனுமதிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. பவானியில், தென்னகத்தின் காசி என்றழைக்கப்படும் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி, ஈஸ்வரர், அம்மன், பெருமாள் சுவாமிகளை வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக மகாளய அமாவாசை, ஆடி பெருக்கு உள்ளிட்ட நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி புனித நீராடி, திதி, தர்ப்பணம் கொடுப்பர். அதிகாலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இரவு 8:00 மணிக்கு சண்டிகேஸ்வரர் பூஜை நடக்கிறது. அடுத்த, 15 நிமிடங்களில் பக்தர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இந்நிலையில் இரு நாட்களுக்கு முன், கோவிலுக்கு வந்த பக்தர்கள், சண்டிகேஸ்வரர் பூஜையின் போது, சுவாமியை வழிபட உள்ளே விடவில்லை என குற்றம்சாட்டினர். மேலும், இது சம்பந்தமான வீடியோ பரவி வருகிறது.
இதுகுறித்து, சங்கமேஸ்வரர் கோவில் அதிகாரிகள் கூறியதாவது: கோவில் பழக்க வழக்கப்படி நாள்தோறும் அர்த்தஜாம பூஜை முடிந்து குறித்த நேரத்தில் நடை சாத்தப்பட்டு வருகிறது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் வெளி மாநில பக்தர்கள் அதிகளவில் வருவதால், அவர்கள் கூட்டமாக ஒவ்வொரு சன்னதியிலும் வழிபாடு செய்து, வெளியே வர தாமதம் செய்கின்றனர். இதனால், உரிய நேரத்தில் நடை சாத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 20ம் தேதி இரவு, கால தாமதமாக வந்த பக்தர்களால் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டது. இனி பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் தரிசிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கோவில் ஆணையாளர் சுவாமிநாதன் கூறுகையில்,‘‘அர்த்தஜாம பூஜை முடிந்து இரவு 8:00 மணிக்கு நடை சாத்துவது வழக்கம். ஐயப்ப சீசன் துவங்கிவிட்டதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சண்டிகேஸ்வரர் பூஜையை முடித்து விட்டு, அங்கேயே அமர்ந்து விடுகின்றனர். பக்தர்கள் வெளியே வருவதில் தாமதம் செய்கின்றனர். கடந்த, 20ம் தேதி பக்தர்களை வெளியே அனுப்ப, கோவில் நடை சாத்த நேரமானதால், அப்போது வந்த ஐயப்ப பக்தர்களை, பணியாளர்கள் உள்ளே விடவில்லை. இதில் வேறு உள் நோக்கம் ஒன்றும் இல்லை. ஐயப்ப சீசன் முடியும் வரை, பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல், சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’’ என்றார்.