பதிவு செய்த நாள்
17
டிச
2023
10:12
ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலுாரில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாண்டியர் கால சிவன் கோவில், அழியும் நிலையில் உள்ளதால், அதை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது மேலக்கொடுமலுாரில் உள்ளது குமுலீஸ்வரர் கோவில். இது, ஒரு காலத்தில் பாண்டியர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் பராமரிக்கப்பட்டு உள்ளது. அதற்கு சான்றாக கல்வெட்டுகளும், சிறந்த சிற்பங்களும், கட்டடக்கலை சிறப்புகளும் உள்ளன.
சதுர வடிவ லிங்கம்; தற்போது, புதர் மண்டி, குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. இதன் வரலாற்று சிறப்பை பாதுகாக்கும் வகையில், கோவிலை பராமரிக்க வேண்டும் என, வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது: சோழர்களுக்கு பின், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில், இந்தக் கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டது. இந்த சிறிய கோவிலில், தேவக்கோட்டம், விருத்தஸ்படிதம் உள்ளிட்ட அமைப்புகள் அழகாக உள்ளன. அர்த்த மண்டபத்துடன் கூடிய கருவறையில், ஆவுடையார் பாண்டியர்களுக்கே உரித்தான சதுர வடிவ லிங்கமாக உள்ளார். கோவிலின் நுழைவு வாயிலில், கஜலட்சுமியின் புடைப்பு சிற்பம் உள்ளது. இங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளை, 1907ல், மத்திய தொல்லியல் துறை பதிவு செய்துள்ளது. இந்த ஊரை பற்றிய திருநெல்வேலி கல்வெட்டில், உத்தமசோழநல்லுார் என்று உள்ளது.
பூஜைக்காக வரி வசூல்; பாண்டியர்கள் காலத்தில் இது, உத்தம பாண்டியநல்லுார் என்று மாற்றப்பட்டுள்ளதை, இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இந்த கோவிலில் உள்ள இறைவனுக்கு, உத்தம பாண்டீஸ்வரமுடையார் என்றும் பெயர். இந்த கோவிலில், அரையன் யாதவராயன் உருவாக்கிய கண்டவிரமிண்டன் என்ற உச்சி பூஜையை தொடர்ந்து நடத்த, மன்னன் சுந்தரபாண்டியன், வடதலை செம்பிநாட்டை சேர்ந்த கொற்றுார், கண்ணிப்பேரி, உழையூர் ஆகிய ஊர்களை நிவந்தமாக கொடுத்துள்ளான். இந்த ஊர்களில் உள்ள விளைநிலங்களுக்கு வரி நிர்ணயிக்கப்பட்டு, அது பூஜைக்காக வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்தக் கோவில், தற்போது புதர் மண்டி சிதிலமடைந்து, குப்பை போடும் இடமாக மாறி உள்ளது. விமானம் இல்லாத மேற்பகுதியையும், சிதைந்த தேவ கோட்டங்களையும் கண்டு சிவ பக்தர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -