தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 09:12
தஞ்சாவூர்; தஞ்சாவூர் நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. குளத்தில் பிரசன்னமான பெருமாளாக திகழ்கிறார். தஞ்சை பெரிய கோவிலை போல இராஜ கோபுரம் சிறியதாகவும் விமானம் பெரியதாகவும் இருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 12 தமிழ் மாதங்களை குறிக்கும் வகையில் 12படிகள் மீது பெருமாளின் 12 நாமாக்களை சொல்லி நடந்து சென்றால் பெருமாள் அனுக்ரஹம் கிடைக்குமாம். இந்த படிகளுக்கு பக்தர்கள் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ் மற்றும் தெலுங்கு புத்தாண்டு தினங்களில் சூடம் ஏற்றி படி பூஜை செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நேற்று 22ம் தேதி இரவு மோகினி அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இன்று 23ம்தேதி விடியற்காலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடந்தது. பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பரமபத வாசல் வழியாக வந்து வைகுண்ட ஏகாதசி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருப்பதி வெங்கடேச பெருமாளே இங்கு பிரசன்னமாகி இருப்பதால் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த புண்ணியம் கிட்டும். திருப்பதி போல இங்கும் கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வந்தனர்.