திருவாசகத்தை இயற்றியவர் மாணிக்கவாசகர், அவர் சொல்லச் சொல்ல இதை எழுதியவர் யார் தெரியுமா? தில்லையம்பல நடராஜப்பெருமானே அந்தணர் வடிவத்தில் வந்து ஏடும் எழுத்தாணியும் கொண்டு எழுதினார். ‘மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று திருவாசக ஏட்டில் கையெழுத்திட்டு சிற்சபையின் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்து விட்டார். திருவாசக ஏட்டைக் கண்ட கோயில் அந்தணர்கள் மாணிக்கவாசகரை அழைத்து திருவாசகத்திற்கு விளக்கம் தருமாறு வேண்டினர்.
அவரும் தில்லை நடராஜரின் சன்னதிக்கு வந்துநின்று ‘அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்று கூறி இறைவனுடன் இரண்டறக் கலந்தார். அதனால் ‘தில்லை பாதி திருவாசகம் பாதிஎன்ற பழமொழி உண்டானது. திருவாசகம் வேறு, தில்லை நடராஜர் வேறு அல்ல. இரண்டும் ஒன்றே. திருவாசகம் முழுவதும் சிதம்பரப்பெருமானின் திருவடியையே போற்றுகிறது. திருவாசகத்தில் சிவபுராணம் தொடங்கி, அச்சோ பதிகம் வரை 51 தலைப்புகளில் 658 பாடல்கள் உள்ளன. மாணிக்கவாசகருக்கு சிறப்பு செய்யும் விதத்தில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி திருவாதிரை விழா அமைந்துள்ளது. பத்துநாட்கள் நடைபெறும் இவ்விழாவில், ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் மாணிக்கவாசகர், சுவாமி சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவாசகம் பாடப்படும். குறிப்பாக திருவெம்பாவைப் பாடல்களைப் பாடுவர். அதன்பின் மாணிக்கவாசகருக்கும், சுவாமிக்கும் தீபாரதனை நடக்கும்.