நடராஜரின் திருநடனத்தை சிவகாமி என்ற பெயர் தாங்கி அம்பிகை கண்டு களிப்பதைக் காணலாம். ஆனால், சிதம்பரத்தில் நடராஜர் சிவசக்தியின் அம்சமாக இருப்பதாக ஐதீகம். அதாவது ஆண்பாதி, பெண்பாதியான அர்த்தநாரீஸ்வரரின் தன்மையுடன் திகழ்கிறார். வலப்பாகம் சிவமும், இடப் பாகம் சக்தியும் வீற்றிருக்கின்றனர். அதனால், சிவகாமி இல்லாமல் நடராஜரை வழிபட்டாலே இருவரையும் வழிபட்ட பலன் உண்டாகும். சிவபெருமானுக்குரிய 25 சிவமூர்த்தங்களில் தலையாயதாக நடராஜரே விளங்குகிறார். இவருக்கு அம்பலவாணர், ஆடல்வல்லான், கூத்தப்பெருமான், சபாபதி, நிருத்தன், நடேசன், சித்சபேசன் என்று பல பெயர்கள் இருந்தாலும் நடராஜர் என்ற பெயரே மக்கள் மத்தியில் பிரசித்தமாக உள்ளது. பழந்தமிழ் இலக்கியமான பதிற்றுப்பத்தில் ஆடல்வல்லான் என்று இவர் அழைக்கப்பட்டிருக்கிறார்.