பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
கோபிசெட்டிபாளையம்: கோபி ஸ்ரீஞான மூர்த்தீஸ்வர சமேத முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு காளி, அம்மன் என பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து கொண்டாடினர். கோபி மொடச்சூர் காமராஜர்புரத்தில் ஸ்ரீ ஞான மூர்த்தீஸ்வர சமேத முத்தாரம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் அக்., 14 தேதி முதல் தசரா திருவிழா துவங்கியது. அன்று முதல் காளிபூஜை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை, 108 திருவிளக்கு பூஜை நடந்தன. எட்டாம் நாளான நேற்று, குறவன் குறத்தி வேடம், குரங்கு வேடம், திருநங்கை வேடம், பைத்தியகாரன் வேடம், அம்மன் வேடம், காளி, முருகன், விநாயகர், போலீஸ், மகிஷாசுரன், பேய், முத்தாரம்மன் வேடம் என பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் கொண்டாடினர். ஒன்பதாம் நாளான இன்று காலை, 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், காலை, 8 மணிக்கு ஊர் இறங்குதல், மதியம் அன்னதானம், இரவு, 11 மணிக்கு சரஸ்வதிக்கு சிறப்பு அலங்கார பூஜை, இரவு, 12 மணிக்கு செல்வ விநாயகர், பெருமாள்சாமி, மகிஷாசுர வர்த்தினி, ஞான மூர்த்தீஸ்வர சமேத முத்தாரம்மன், பத்ரகாளியம்மன் ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நெல்லை நாடார் சங்க தலைவர் ராஜதுரை, பொருளாளர் தங்கவேல், செயலாளர் ஆறுமுகபாண்டி, நிர்வாகிகள் லட்சுமணன், ஜெகநாதன் உள்ளிடோர் செய்திருந்தனர்.