பதிவு செய்த நாள்
24
அக்
2012
10:10
கொல்லூர்: நவராத்திரி பண்டிகையை ஒட்டி, கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை கோவிலில், நேற்று ஆயுத பூஜை மற்றும் தேர் திருவிழா கோலாலமாக நடந்தது. கர்நாடக மாநிலம், மங்களூர் அருகேயுள்ள கொல்லூரில், பிரசித்திப் பெற்ற மூகாம்பிகை கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு, நேற்று ஆயுத பூஜையை ஒட்டி, தேர் திருவிழா (மகா ரதோற்சவம்) நடந்தது. நேற்று அதிகாலை கோவிலில், மூலவருக்கு வழக்கமான நிர்மால்ய பூஜைக்குப் பின், மகா சண்டிகா ஹோமம் நடந்தது. தேவிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, தேருக்கான ரத பூஜை நடந்தது. தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தி, தேரில் ஏற்றப்பட்டு, கோவிலின் மேற்கு வாசல் வரை, பக்தர்களால் தேர் இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து திரும்பவும், கிழக்கு வாசல் வரை கொண்டு வரப்பட்டது.அப்போது தேரில் இருந்து, நாணயங்கள் பக்தர்களை நோக்கி வீசப்பட்டன. அவற்றை, பக்தர்கள் முண்டியடித்து பெற்றனர். தேர் நிலைக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.இன்று, கோவில் வாக்தேவதா சன்னதியில், குழந்தைகளுக்கான கல்வியை போதிப்பதற்காக, "எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி துவங்கும். பின், சரஸ்வதி மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பர். இதற்காக பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்துள்ளனர்.