பதிவு செய்த நாள்
15
ஜன
2024
07:01
"முப்பது கோடி முகமுடையாள் - உயிர் மொய்ம்புற வொன்றுடையாள் - இவள் செப்பு மொழி பதினெட்டுடையாள் - எனிற் சிந்தனை ஒன்றுடையாள்என்ற பாரதியார் பாட்டிற்கு ஏற்ப மொழியாலும், கலாசாரத்திலும் பிரிந்திருந்தாலும் நாம் சிந்தனையில் ஒன்றுப்பட்டு தான் இருக்கிறோம். அதற்கு உலகம் முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் அறுவடை திருவிழாக்கள் சிறந்த சான்று. தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படுவதைப் போலவே பல மாநிலங்களில் மகாசங்கராந்தி என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படகிறது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் லோஹ்ரி என்ற பெயரிலும் அசாமில் மாஹ் பிகு என்ற பெயரிலும் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் என்று தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு பண்டிகை தான் பொங்கல் திருநாள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற நமது முன்னோர் வாக்குப்படி தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி இயற்கைக்கும், நமக்கு உறுதுணையாக இருக்கும் மற்ற உயிர்களுக்கும் நமது நன்றியை தெரிவிக்கிறோம்.
தமிழக மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா இது. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் முதல் நாள் தைப்பொங்கல். பொங்கலன்று அதிகாலை எழுந்து, வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைத்து புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து மஞ்சள் கொத்தையும் கரும்பையும் காய்கறிகளையும் வைத்து வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிட்டு கொண்டாடுகின்றனர்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை -- என்றான் வள்ளுவன்.
பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள் பல ஆயினும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு விவசாயம் செய்து வாழும் நம் மக்கள் தங்கள் உயிரின் அடிப்படையாய் இருக்கும் பயிர்களை அறுவடை செய்யும் காலத்தில் இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கலிட்டு அக்காலத்தில் வழிப்பட்டு வந்தனர். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் விழாவாகவும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகை தொடங்கி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடர்ச்சியாக பொங்கலின் மகிழ்ச்சி தொடர்கிறது.
அதுபோலவே தமிழ மக்களின் பாரம்பரிய நடனம், இசை என கலாச்சார கொண்டாட்டங்களும், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிபந்தயம், சேவல் சண்டை என விளையாட்டுப் போட்டிகளும் தமிழகம் முழுவதும் களைக்கட்டுகின்றன. தமிழகத்தில் பாரம்பரியமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2014-ம் ஆண்டுக்கு முன்பு, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசு தடை செய்ததால் தொடர்ந்து அதனை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. சட்ட திருத்தம் கொண்டு வந்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுத்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு.
தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் பேரன்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழ் மொழியின் பெருமைகளையும் திருக்குறளின் சிறப்பையும் உலக அறிய செய்து வருபவர். தமிழ் மக்களின் பாரம்பரிய சிறப்பையும், பண்பாட்டு செறிவையும் செல்லும் இடமெல்லாம் சொல்லிக் கொண்டு இருப்பவர் பிரதமர்.
பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்ரமணிய பாரதியார் இருக்கையும் அமைக்க ஏற்பாடு செய்தார். திருக்குறள் மீது தீரா பற்று கொண்ட பிரதமர் பல மொழிகளிலும் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார்.
ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் தொன்மைவாய்ந்த கனியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முழுக்கத்தை உலகமே கேட்க முழங்கினார். சதுரங்க விளையாட்டிற்கும், தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை விளக்கியதுடன் இந்தியாவின் செஸ் தலைநகராக தமிழகம் விளங்குவதாகவும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் புகழ்ந்துரைத்தார் மோடி. தமிழ் மீது மட்டுமின்றி தமிழக மக்கள் மீதும் அளவில்லா பற்றும் பாசமும் கொண்ட மோடி, தமிழகத்திற்கு தொடர்ச்சியாக திட்டங்களை வழங்கி வருகிறார். ஜல்ஜீவன் மிஷன், ஜன்தன் யோஜனா, ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் தமிழக மக்களை சென்றடைந்துள்ளன. மேக் இன் இந்தியா திட்டம், பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம், முத்ரா யோஜனா, உஜாலா திட்டமும் தமிழக மக்களுக்கு பயனளித்துக் கொண்டிருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா முன்னெடுப்பு உலகில் எங்கும் காண முடியாத அளவிற்கு டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. இதன் வெற்றியை நாம் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல் தமிழக திட்டங்களுக்கு தேவையான நிதியையும் மத்திய அரசு வாரி வாரி வழங்கி வருகிறது. முந்தைய காலத்தை ஒப்பிட்டால் கடந்த 9 ஆண்டுகளில் மூன்று மடங்கிற்கும் அதிகமாக தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கியிருக்கிறது. மானியங்கள் மத்திய நிதி உதவி திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகம் ரூபாய் 10.76 லட்சம் கோடி அளவுக்கு நிதி பெற்றுள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் அளித்த வரியை விட இரண்டு மடங்கு அதிகம்.
ஆனால் தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களோ மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடையாமல் தடைபோடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். சொந்த அரசியல் லாபத்திற்காக காழ்புணர்ச்சியுடன் சதா சர்வகாலமும் மத்திய அரசு எதிர்ப்பதையே இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். இதனால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல பல திட்டங்களும் செயலாக்கம் பெறுவதில் தாமதமும் சிக்கலும் ஏற்படுகிறது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் பாஜ கூட்டணி அரசு மீண்டும் அமையும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜ கூட்டணி 40 இடங்களிலும் வென்று புதிய வரலாறு படைக்கும். மோடி ஆட்சி தொடர தமிழக மக்கள் ஆதரவை வாரி வழங்குவார்கள். தமிழகத்தில் ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ள அரசியல் இருள் விரைவில் அகன்று தமிழகம் புதிய பாதையை நோக்கி பயணிக்கும். தமிழக மக்களின் வாழ்வில் புத்தொளி பாயும். - எல். முருகன், மத்திய இணை அமைச்சர்