பதிவு செய்த நாள்
25
அக்
2012
10:10
சென்னை: சென்னையில் நவராத்திரி பூஜை முடிந்து, ஒன்பது நாட்கள் வழிபாடு நடத்தப்பட்ட, துர்காதேவி சிலைகள், நேற்று கோலாகலமாக விழா எடுக்கப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தியை போலவே, நவராத்திரி ஸ்பெஷலான துர்கா பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும். இவ்விரு நாட்களிலும், பூஜிக்கப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்படும்.
நவராத்திரி விழா: தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடந்து வருகின்றன. சென்னையில், விநாயகர் சதுர்த்தியைப் போல, நவராத்திரி ஸ்பெஷலான துர்கா பூஜையும், சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், கோபாலபுரம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல இடங்களில் துர்கா பூஜை வழிபாடு விமரிசையாக நடத்தப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் பீகார் அசோசியேஷன், தி.நகரில் பெங்கால் அசோசியேஷன், மேற்கு மாம்பலத்தில், "காளிபாரி அமைப்பு உட்பட, பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர் சார்பில், சென்னையில் துர்கா பூஜை வழிபாடு சிறப்பாக நடந்தது.
சிலைகள் கரைப்பு: கடந்த ஒன்பது நாட்களாக கொண்டாடப்பட்டு வந்த, துர்கா பூஜையின் இறுதி நாளான, விஜயதசமியான நேற்று, வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பட்டினப்பாக்கத்தில் கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில், இளைஞர்களும், சிறுவர்களும், வர்ணம்பூசி, உற்சாகத்துடன் நடனமாடியவாறே வந்தனர்.
இதுகுறித்து, பீகார் அசோசியேஷனை சேர்ந்த பிரதீப் கூறியதாவது: எங்கள் அமைப்பு சார்பில், 38வது ஆண்டாக கோபாலபுரத்தில் துர்கா பூஜையை கொண்டாடி வருகிறோம். விழாவில், துர்கா, சரஸ்வதி, லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட ஐந்து சிலைகளை வழிபாடு செய்தோம். நேற்று அவற்றை ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைத்து விட்டோம். சென்னையில் மட்டும், 30க்கும் மேற்பட்டோர் சிலை அமைத்து துர்கா பூஜையை கொண்டாடியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பட்டினப்பாக்கம் கடலில் நேற்றும், இன்றும் துர்கா சிலை கரைப்பு நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
கலர்புல் கலாசாரம்: சென்னையில் வேப்பேரி, சவுகார்பேட்டை, எம்.கே.பி.நகர், புரசைவாக்கம், அயனாவரம், தி.நகர் மற்றும் மேற்கு மாம்பலம் உள்ளிட்ட இடங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில், பல குடும்பத்தினர், 80 ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையில் வசித்து வருகின்றனர். நகை அடகு கடை தொழிலில் கால்பதித்த இவர்கள், தற்போது ஜவுளி, எலெக்ட்ரானிக் பொருட்கள், நகை உள்ளிட்டவற்றில் மொத்த விற்பனையில் முன்னணி வியாபாரிகளாக மாறியுள்ளனர். வாழ்விற்காக இவர்கள் இடம்மாறி இருந்தாலும், தங்கள் பாரம்பரிய வழக்கப்படி பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
தாண்டியா நடனம்: வண்ணமயமான பொடிகளை தூவி கொண்டாடப்படும் ஹோலி, துர்கா பூஜை, தீபாவளி ஆகிய பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்தியின் ஒன்பது நாட்களிலும் வேப்பேரி, அயனாவரம், சவுகார்பேட்டை ஆகிய இடங்களில், பெண்கள் பங்கேற்கும் தாண்டியா நடனமும் நடந்து வருகிறது. மெட்ரோ ரயில், கட்டட பணிகளுக்காக ஏராளமானவர்கள் சென்னையில் குடியேறி இருந்த போதிலும், பாரம்பரியமாக நடந்து வரும், இத்தகைய விழாக்களில் அவர்கள் பங்கேற்பதில்லை. இன, மொழி வேறுபாடுகளை கடந்து, வடமாநில மக்கள் நடக்கும் கலாசார திருவிழாக்கள், அப்பகுதிகளை ”ற்றி வசிக்கும் சென்னை வாசிகளுக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.