தசரதர் பிள்ளைவரம் வேண்டி புத்திரகாமேஷ்டி யாகத்தை ரிஷ்ய சிருங்கமுனிவரின் தலைமையில் செய்தார். யாகத்தின் பயனாய் கிடைத்த பாயாசத்தை பட்ட மகிஷிகள் கோசலை, கைகேயிஇருவரும் தங்கள் பங்கு போக மீதியை சுமித்ராவிற்குக் கொடுத்தனர். அதனால், கோசலைக்கு ராமன், கைகேயியிக்குப் பரதன், சுமித்ராவிற்கு லட்சுமணன், சத்ருக்கனன் பிறந்தனர். ஆனால், இந்த நால்வரின் பிறப்புக்கு வேறொரு காரணமும் சொல்வதுண்டு. ஒருபிள்ளையைப் பெற்றுக் கொண்டால், அந்த பிள்ளை பிதுர் தர்ப்பணத்தை கயா க்ஷேத்திரத்தில் செய்வானோ மாட்டானோ என்ற சந்தேகம் அவருக்கு இருந்ததாம். கயாவில் பிதுர்க்கடன் செய்வது மிகவும் விசேஷம். அதனால், ஒருவன் இல்லாவிட்டால் வேறொருவனாவது கயாவில் தனக்குப் பிண்டம் போடுவான் என்று தசரத சக்கரவர்த்தி நினைத்தார். அதனாலேயே தனக்கு நான்கு பிள்ளைகள் இருக்கட்டும் என்று முடிவெடுத்ததாக வால்மீகி ராமாயணத்தில் ஒரு செய்தி உண்டு. இதன்மூலம் பிதுர்தர்ப்பணத்தை பிள்ளைகள் அவசியம் பெற்றோருக்கு செய்யவேண்டும். ராமாயண காலத்திற்கு முந்தியே கயாவில் தர்ப்பணம் செய்யும் பழக்கம் இருந்திருக்கிறது என்ற உண்மைகள் வெளிப்படுகிறது. ஒரு பிள்ளை செய்யாவிட்டாலும் இன்னொரு பிள்ளையாவது முன்னோருக்குரிய பிதுர்க்கடனை அவசியம் செய்ய வேண்டும் ஆகிய கருத்துகளை அறிய முடிகிறது. தசரதருக்கு அந்திமக்கிரியைச் செய்யும் பாக்கியத்தை பெற்ற பிள்ளை நான்காவது பிள்ளையான சத்ருக்கனனே.ராமனும், லட்சுமணனும் காட்டிற்குச் சென்றதாலும், கைகேயி பெற்ற வரத்தால் பரதனும் தசரதருக்கு இறுதி கடமையைச் செய்யமுடியாமல் போனது. ராமன் மீண்டும் அயோத்திக்கு வந்து பட்டாபிஷேகம் செய்த பிறகு, தசரதருக்காக கயா சென்று பிண்டம் அளித்ததாக ஆனந்த ராமாயணம் கூறுகிறது.