பதிவு செய்த நாள்
26
அக்
2012
10:10
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோவில் தசராவின் முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசூரசம்ஹாரம், நேற்று முன்தினம் நள்ளிரவு, கோலாகலமாக நடந்தது. மைசூருக்கு அடுத்தபடியாக சிறப்பு வாய்ந்த, இக்கோவில் தசரா திருவிழா, அக்., 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில், தினமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசூரசம்ஹாரம், பத்தாம் நாளான, நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவில் கடற்கரையில் நடந்தது. ஆணவம் கொண்டு, தன்தலை, சிங்கத்தலை, எருமைத்தலை, சேவல் உருவில் அடுத்தடுத்து வலம் வந்து போரிட்ட மகிஷாசூரனை, முத்தாரம்மன், தனது வேலால் சம்ஹாரம் செய்தார். 11:45 மணிக்கு துவங்கிய இந்நிகழ்ச்சி, 12:25 மணிக்கு முடிந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். தீமை அழியும் உண்மையை, உலகிற்கு உணர்த்தும் விதமாக, ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து, முத்தாரம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது, அம்மன் வீதியுலா வந்தார். தசராவையொட்டி, வேண்டுதலுக்காக, சுவாமி, அம்மன், காளி, அரக்கன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து, காணிக்கை பிரித்த ஏராளமான பக்தர்கள், கோவிலைச் சேர்ந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.