திருச்செந்துார் மாசி திருவிழா; தங்கமுத்து கிடா வாகனத்தில் சுவாமி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2024 09:02
திருச்செந்துார்; திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா மூன்றாவது நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும் தெய்வானைஅம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா 14ம் தேதி துவங்கியது. விழாவில் நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் தங்கமுத்து கிடா வாகனத்திலும் தெய்வானைஅம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஐந்தாம் திருவிழாவாக நாளை பிப்.,18 இரவு 7:30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள், சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் வைத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடக்கிறது. பிப்.,20 மாலை 4:30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 21ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று காலை 11:00 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்., 23 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. 24ம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன் கோயில் இணை ஆணையர் கார்த்திக், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.