பதிவு செய்த நாள்
17
பிப்
2024
10:02
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ரத சப்தமியை முன்னிட்டு கலசப்பாக்கம் செய்யாற்றில் சந்திரசேகர், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.
சூரியன் வடக்கு திசை நோக்கி நகரும் தை மாதத்தில் அமாவாசை முடிந்து வரும், 7வது நாள் ரத சப்தமியாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வடக்கு திசையிலுள்ள கலசப்பாக்கம் செய்யாற்றில், சந்திரசேகரர், (அருணாசலேஸ்வரர் நின்ற நிலை அலங்காரம்-) மற்றும் கலசப்பாக்கம் திருாமமூடீஸ்வரர் ரத சப்தமி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத சந்திரசேகரர் கோவிலிலிருந்து புறப்பட்டு செல்லும் வழியில், தனக்கோட்டிபுரம் கிராமத்தில், அவருக்கு சொந்தமான வயலுக்கு சென்று அறுவடை செய்யப்பட்ட நெல் பயிரை பார்வையிட்டு கணக்கு பார்க்கும் நிகழ்வு நடந்தது. பின், அங்கிருந்து புறப்பட்டு செய்யாற்றுக்கு செல்லும் வழியில் தென்பள்ளிப்பட்டு கிராம மக்கள் பாரம்பரிய வழக்கப்படி, உண்ணாமுலையம்மன் சமேத சந்திரசேகரருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வரவேற்று செய்யாற்றங்கரைக்கு அழைத்து சென்றனர். அங்கு கலசப்பாக்கத்திலுள்ள திரிபுரி சுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர், உண்ணாமுலையம்மன் சமேத சந்திரசேகரரை வரவேற்று, தீர்த்தவாரிக்கு அழைத்து செல்லும் நிகழ்வு நடந்தது. செய்யாற்றில், சூல வடிவிலான திருமாமுடீஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் செய்யாற்றில் இறங்கி நீராடும் தீர்த்தவாரி நிகழ்வு நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.