பதிவு செய்த நாள்
17
பிப்
2024
11:02
சென்னை: இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், வானிலை நிலவரம், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிவது உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய, இன்சாட் - 3டிஎஸ் செயற்கை கோளை வடிவமைத்துள்ளது. இதன் எடை, 2,274 கிலோ. இதை சுமந்து கொண்டு, ஜி.எஸ்.எல்.வி., - எப்14 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று (பிப்.,17) மாலை, 5:30 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது, ஜி.எஸ்.எல்.வி., வகையில், 16வது ராக்கெட். இந்த இன்சாட் - 3டிஎஸ் வெற்றி பெற வேண்டி ஆந்திர மாநிலம் சூல்லூர்பேட்டையில் உள்ள ஸ்ரீ செங்கலம்மா கோயிலில் இன்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பிரார்த்தனை செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் கூறுகையில்," வானிலை ஆய்வுக்காக இன்சாட்-3டிஎஸ் என்ற வானிலை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜிஎஸ்எல்வி ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் புவி அறிவியல் அமைச்சகத்திற்காக உருவாக்கப்பட்டது. இன்சாட் வரிசை செயற்கைக்கோள்களில் இது மூன்றாவது செயற்கைக்கோள் ஆகும் என்றார்.