தேர்தல் வெற்றி, எதிரிகளின் சக்தியைக் குறைக்க வீட்டில் ராஜா ஷியாமளா யாகம் நடத்திய சந்திரபாபு நாயுடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17பிப் 2024 12:02
அமராவதி: உண்டவல்லியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இல்லத்தில் ராஜா ஷியாமளா யாகம் நடைபெற்றது.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாரா சந்திரபாபு நாயுடு இல்லத்தில் மூன்று நாள் ராஜ ஷியாமளா யாகம் நேற்று தொடங்கியது. முதல் நாள் பூஜை மற்றும் யாகச் சடங்குகளில் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மனைவி நாரா புவனேஸ்வரி கலந்து கொண்டனர். இந்த யாகம் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக செய்யப்பட்டதாக கருதப்படுகிறது.
இது குறித்து அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், “வரவிருக்கும் தேர்தலுக்கு முன்னதாக தெய்வீக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக நேற்று சந்திரபாபு நாயுடு மற்றும் குடும்பத்தினர் அவரது உண்டவல்லி இல்லத்தில் ராஜா ஷியாமளா யாகத்தைத் தொடங்கினர். 50க்கும் மேற்பட்ட ரித்விக்கள் (வேத பண்டிதர்கள்) பங்கேற்கும் யாகம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது. ராஜா ஷியாமளா யாகம் வெற்றியைப் பெறுவதற்கும் அதிகாரத்தை அடைவதற்கும் நடத்தப்படுகிறது, மேலும் இது ஒருவரின் எதிரிகளின் சக்தியைக் குறைக்க வேண்டியும் செய்யப்படுவதாகும். ராஜா ஷ்யாமளா யாகம் ராஜா மாதங்கி தேவியின் வழிபாட்டை மையமாகக் கொண்டது என்றனர். விசாகப்பட்டினம் சாரதா பீடத்தின் சுவாமி ஸ்வரூபானந்தேந்திரா ராஜா ஷியாமளா யாகத்தை தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.