சபரிமலை மேல்சாந்தி நியமனத்தில் மாற்றம் கோரிய மனுக்கள் தள்ளுபடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2024 04:02
சபரிமலை; சபரிமலை கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களையும் மேல் சாந்திகளாக நியமிக்க கோரிய மனுக்களை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களில் கேரளாவை சேர்ந்த பிராமணர்கள் மட்டுமே மேல் சாந்திகளாக நியமிக்கப்படுகின்றனர். ஒரு ஆண்டு இவர்களின் பதவி காலமாகும். திருவிதாங்கூர் தேவசம்போர்டு நேர்முக தேர்வு நடத்தி அதில் இருந்து ஒருவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்கின்றனர். இந்த நடைமுறை புராதன காலம் முதல் இருந்து வருகிறது. இந்நிலையில் கோட்டயத்தைச் சேர்ந்த விஷ்ணு நாராயணன் உள்ளிட்ட ஆறு பேர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களில் மேல் சாந்தி பொறுப்புக்கு கேரள பிராமணர்களை மட்டும் நியமிப்பது மனித உரிமை மீறல் என்றும்,இத்தகைய தீண்டாமையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், பூஜை விதிகள் தெரிந்த அனைவரையும் மேல் சாந்திகளாக நியமிக்க திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தனர்.
இதற்கு பதில் மனு தாக்கல் செய்த திருவிதாங்கூர் தேவசம்போர்டு தரப்பில் கூறியதாவது: சபரிமலை மற்றும் மாளிகைபுறம் கோயில் மேல் சாந்தி பொறுப்புக்கு புராதன காலம் முதல் கேரள பிராமணர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு பொதுவான பதவியோ நிரந்தர பதவியோ அல்ல. முன் வழக்கப்படி ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 35 முதல் 60 வயதுக்கு இடையே உள்ளவர்கள் தான் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தனர். இதை ஏற்றுக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கே நரேந்திரன் அஜித்குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: சபரிமலை கோயிலின் பூஜை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டியது திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கடமையாகும். சபரிமலை கோயிலின் தனிப்பட்ட அம்சங்களின் அடிப்படையில் தான் நியமனம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இதில் தலையிட முடியாது. எனவே விஷ்ணு நாராயணன் உள்ளிட்ட ஆறு பேர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்கிறோம். இவ்வாறு தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.