நான்குநேரி; நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று கருட சேவை வைபவம் நடந்தது. நான்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும், 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானது ஆகும். இங்கே ஆண்டு தோறும் பங்குனி, மற்றும் சித்திரை மாதம் தேர் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். பங்குனி திருக்கல்யாண திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை இரு வேளைகளிலும் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கைத் தாயார் வாகனத்தில் வீதி உலா வைபவம் நடந்தது. நேற்று 5ம் திருவிழாவை முன்னிட்டு காலையில் வானமாமலை பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் வானமாமலை பெருமாள் ஸ்ரீ வரமங்கை தாயார், ஆண்டாள் கருட, கஜலட்சுமி, சேஷ வாகனத்தில் எழுந்தருளிய வீதி உலா வைபவம் நடந்தது. இதில் நான்குநேரி மடத்தின் 31வது பட்ட மடாதிபதியான மதுரகவி வானமாமலை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.