திருப்புவனத்தில் திருக்கல்யாணம்; திருமாங்கல்ய கயிறு மாற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மார் 2024 04:03
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவ உற்சவம் நேற்று நடந்தது. திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் சவுந்தர நாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த பத்து நாள் திருவிழாவில் தினசரி அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் இன்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்பவனேஷ்வரர் சவுந்தரநாயகி அம்மன், பிரியாவிடை தாயாருடன் எழுந்தருளினார். திருக்கல்யாணத்தை முன்னிட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மன் சார்பாக சேகர் பட்டரும், சுவாமி சார்பாக ஈஸ்வர பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். காலை 9:45 மணிக்கு பாபு பட்டர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்சவம் முடிவடைந்த பின் தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருமணமான பெண்கள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு புதிய திருமாங்கல்ய கயிறு மாற்றி கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. மானாமதுரை டி.எஸ்.பி. கண்ணன், இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர். கடந்தாண்டு திருக்கல்யாண உற்சவத்தில் பெண்கள் தங்க நகைகளை பறிகொடுத்ததையடுத்து இந்தாண்டு கூடுதல் பெண் போலீசார் சாதாரண உடையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் அடிக்கடி ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை எச்சரித்த வண்ணம்இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை காலை எட்டு மணிக்கு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.