பதிவு செய்த நாள்
30
அக்
2012
11:10
ஆத்தூர்: ஆத்தூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில், அன்னாபிஷேக பூஜைகள், நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மையப்பராக இருந்து, உலகை காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று, உச்சி கால பூஜையின்போது, இந்த அன்னாபிஷேகம் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நாளில் நடத்தப்படும் அன்னாபிஷேகத்தை, தரிசிப்பவர்களுக்கு, "அன்னம் குறைவு ஒருபோதும் ஏற்படாது என்பது நம்பிக்கையாக உள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்துள்ள தென்பொன்பரப்பி கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 5.5 அடி உயரத்தில், காந்தக் கல்லில், 16 முகங்களுடன் சிவலிங்கத்தை, காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்துள்ளார். இங்கு, ஒவ்வொரு ஆண்டும், அன்னாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியொட்டி, 25 கிலோ அரிசியில் சமைத்த சாதம், தக்காளி, கத்தரிக்காய், பாகற்காய், திராட்சை, கேரட், அன்னாசி, பச்சை பட்டாணி உள்ளிட்ட காய்கறி, பழங்களுடன் சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 300 கிலோ அரிசியில் சமைத்த சாதங்கள், கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. அப்போது, குழந்தை பாக்கியம், திருமணத்தடை, கடன் தொல்லை, நவகிரக தோஷங்கள் மற்றும் வறுமை இல்லாமல் வாழ்ந்திடவும், ஆண்கள், பெண்கள் என, ஆயிரக்கணக்கானோர் சொர்ணபுரீஸ்வருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை, பிரசாதமாக பெற்று சாப்பிட்டனர். அதேபோல், ஆத்தூர் கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், ஆறகளூர் காமநாதீஸ்வரர், வீரகனூர் கங்கா சவுந்தரேஸ்வரர், ஏத்தாப்பூர் சம்பவ மூர்த்தீஸ்வரர், வெங்கனூர் விருத்தாச்சலீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தது.மேலும், ஆத்தூர் வீரஆஞ்சநேயர் கோவிலில் நடந்த அன்னாபிஷேக விழாவில், வீரஆஞ்சநேயர், அன்னக்காப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி, சேலம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.