பழநி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக புரளி: சாப்ட்வேர் இன்ஜினியர் கைது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2024 12:03
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், காஞ்சிபுரம் உள்ளிட்ட கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக போலி புகாரை இமெயிலில் அனுப்பிய கேரள சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். இக்கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக அந்தந்த மாவட்ட எஸ்.பி.,அலுவலகம், டி.ஜி.பி.,அலுவலகம்,போலீஸ் ஸ்டேஷன்களுக்கு இமெயிலில் புகார் வந்தது. இதை உண்மை என நம்பிய வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்ப நாய் பிரிவினர் பழநி முருகன் கோயில்,ரயில்வே ஸ்டேஷனில் தீவிர சோதனை நடத்தினர். முடிவில் எந்த இடத்திலும் வெடிகுண்டு இல்லையென உறுதியானது. இது போலி புகார் எனவும் உறுதியானது. இதையடுத்து திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப், போலி இமெயில் அனுப்பியது யார் என கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி இமெயில் வந்த ஐ.பி.,முகவரியை வைத்து விசாரணையை துவக்கினர். பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கில் அதனை அனுப்பியது சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேஷ் 45,என்பது தெரிந்தது. இவர் இதேபோல் கேரளாவிலும் பல்வேறு போலி மிரட்டல் புகார்களை அனுப்பியுள்ளார். எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்தபோது இவரை திண்டுக்கல் போலீசார் கைது செய்தனர்.